உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றியப் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 121 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேரை போலீசார் நேற்று முன்தினம் (05-07-24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குறிப்பாக மணிபூரி மாவட்டத்தில் உள்ள ராம் குதிர் அறக்கட்டளை கட்டிடத்தில் போலே பாபா பதுங்கி இருக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சாமியார் போலே பாபா வீடியோ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “"இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், கமிட்டியின் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.