குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பல மாநிலங்களிலும், அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் முதல்வர்களே நேரடியாக தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வெறும் அறிக்கையை மட்டும் வெளியிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி கொண்டனர்.
பிரியங்கா காந்தி மட்டுமே டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். ஆனால் சோனியா காந்தி கூட அறிக்கை தான் வெளியிடுகிறார். ராகுல் காந்தியும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதுபோலவே காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தார்கள். ஆனால் மற்ற முதல்வர்களை போல அவர்கள் தெருவில் இறங்கி போராட தயக்கம் காட்டுகின்றனர்’’ எனக் கூறியுள்ளார்.