அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.
![praveen](http://image.nakkheeran.in/cdn/farfuture/VTv5UXVT55EMdQvxCyyQQToC4UWopwxrbUpOnBm-PfM/1573286513/sites/default/files/inline-images/praveen-thogadia.jpg)
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், மீண்டும் அந்த இடத்தில ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் எனவும் சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து கடந்த 1992 ஆம் ஆண்டு சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் இந்த நிலம் தொடர்பாக அலஹாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த அந்த நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து இஸ்லாமிய அமைப்பான சன்னி வக்பு வாரியம், மற்றும் இந்து அமைப்புகளான நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தி வழக்கில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை அளித்தது.
அதில், வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகையில், “ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று 450 ஆண்டுகளாக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராமர் கோயிலுக்காக லட்சக்கணக்கான இந்துக்கள் தங்கள் உயிரை, வாழ்க்கையை, குடும்பத்தைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தத் தீர்ப்பை அர்ப்பணிப்பதோடு, சல்யூட் செய்கிறேன். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். லட்சக்கணக்கான இந்துக்கள் செய்த தியாகத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்" என்று பிரவீன் தொகாடியா தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.