பாஜக தலைவர் சுசில்குமார்மோடிக்கும் தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிசோருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்வராக ஐ.ஜ.த.தலைவர் நிதிஷ்குமாரும், துணை முதல்வராக பீகார் மாநில பாஜக தலைவர் சுசில்குமார் மோடியும் பதவி வகித்து வருகின்றனர். பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020-ல் நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில், ’’ வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை விட ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். கடந்த தேர்தலைப் போல 50:50 என்கிற சதவீத கணக்கில் போட்டியிடக் கூடாது. இதனை நிதிஷ்குமாரிடம் வலியுறுத்துவேன் ’’ என சமீபகாலமாக சொல்லி வருகிறார் பிரசாந்த் கிஷோர். இதே கருத்தை எதிரொலிக்கும் வகையில், ’’ பாஜகவை விட அதிக சீட்டுகளை ஐக்கிய ஜனதா தளம் பெற வேண்டும் ‘’ என இன்று டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் கிஷோர்.
இந்த பதிவு, பாஜக தலைவர்களை கொந்தளிக்க வைத்திருக்கும் நிலையில், ‘’ பிரதமர் மோடியின் தலைமையிலான கூட்டணி 2020 தேர்தலை சந்திக்கும். அதைப்பற்றி எந்த டேட்டா திரட்டுபவர் சொல்வதும் எடுபடாது ‘’ என பிரசாந்த் கிஷோரை கடுமையான வார்த்தைகளில் தாக்கி அதே டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் துணை முதல்வர் சுசில்குமார்மோடி. உடனே இதற்கு பதில் சொல்லும் முகமாக, ‘’ எந்த தலைமையின் கீழ் கூட்டணி அமையும் என்பதை பீஹார் மக்கள்தான் தீர்மானிப்பார்களே தவிர, மேலே அமர்ந்துள்ள எந்த ஒரு தலைவரோ அல்லது தேர்தலில் தோற்றும் துணைமுதல்வராக உட்கார்ந்திருக்கும் சுசில்குமார்மோடியோ அல்ல ‘’ என பிரதமர் மோடியையும் மாநில தலைவர் மோடியையும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளார் பிரசாந்த் கிஷோர். இதற்கும் அசராத சுசில்குமார், ‘’ கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி குளிர் காய்வதுதான் கொள்கையில்லாத கூலிக்காக வேலை செய்கிற நாடோடியான இந்த டேட்டா திரட்டியின் வேலை ‘’ என ட்வீட் செய்திருக்கிறார். இவர்களின் இந்த அதிரடி ட்விட்டர் தாக்குதல்கள் பீஹார் அரசியலில் மட்டுமல்ல தேசிய அளவிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலுக்கான பின்னணி குறித்து விசாரித்தபோது, ‘’ நாடாளுமன்றத்துக்கு 2024-ல் நடக்கும் தேர்தலின் போது மாநில கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக வேண்டும் என கனவு கண்டு வருபவர் பிரசாந்த் கிஷோர். அதற்காகத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்குப் பெற்ற கட்சிகளுடன் தனது தொழில் உறவுகளை வளர்த்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில் நிதிஷ்குமாருடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் பிரதமர் மோடி. அந்த நட்பிலும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியிலும் விரிசல் உண்டாக்க வேண்டும் என்பதே அவரது திட்டம். முதல் கட்டமாக பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற திட்டத்தில் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த, அதிக இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட வேண்டும் என்கிற தூண்டிலை வீசி வருகிறார். பிரசாந்த் கிஷோரின் தூண்டிலில் நிதிஷ்குமார் சிக்குவாரா?என்பது போகப்போகத்தான் தெரியும். பிரசாந்த் கிஷோரின் நோக்கத்தையும் திட்டத்தையும் அறிந்துகொண்டதால் அவருக்கு பதிலடி தந்து வருகிறார் பாஜக தலைவர் சுசில்குமார் மோடி ‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.