
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக இந்திய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இந்தியத் தூதரகத்தில் மல்டி டாஸ்கிங் பிரிவு அதிகாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மாஸ்கோவில் இந்தியத் தூதரகத்திலிருந்துகொண்டு சத்யேந்திர சிவல் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ(ISI)க்கு உளவு பார்த்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சத்யேந்திர சிவலை கைது செய்து விசாரணை செய்தனர்.விசாரணையில் சத்யேந்திர சிவல் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். ஆனால் போலீசார் விசாரணையின் தீவிரப்படுத்திய நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் போது இந்தியா குறித்த ரகசிய தகவலைப் பாகிஸ்தானுக்கு கொடுத்ததாகவும், மேலும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகள், இந்தியத் தூதரகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் பற்றிய முக்கியமான ரகசியத் தகவல்களைப் பெற்று ஐ.எஸ்.ஐக்கு அனுப்பி வைத்தாகவும் தெரிவித்துள்ளாராம். இதனைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரே பாகிஸ்தானிற்கு ரகசியத் தகவலைக் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.