முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி ஆர் எஸ் எஸ் விழாவில் பங்கேற்றார். இருந்தாலும் அந்த விழாவில் அவர் பேசிய கூற்றுகள் யாரும் எதிர்பார்க்க முடியாதவை. மதத்தையும், தேசியத்தையும் கொள்கையாக கொண்ட ஆர் எஸ் எஸ் அமைப்பின் விழாவுக்கு சென்று அவர்களுக்கு எதிர்க்கவே பேசி, விழாவுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிய காங்கிரஸ் மூத்த தலைவர்களின் வாயாலே பாராட்டுகளை பெற்றுக்கொண்டிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் மார்பிங் செய்து பரவிவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசியது வரை அவர் தலையில் கருப்பு குல்லா அணியவே இல்லை, அதுமட்டுமில்லாமல் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் உறுதிமொழி ஏற்கும் போது கையை குறுக்கே நெஞ்சருகில் வைத்து எடுப்பார்கள். ஆனால், பிரணாப் அந்த சமயத்தில் நேராகத்தான் நிற்கிறார். சமூக வலைத்தளங்களில் இவை அப்படியே மாற்றி பரவி வருகிறது.
பிரணாப் முகர்ஜியின் மகள், ஏற்கனவே இதுபோன்று நடக்கலாம் என்று எச்சரித்துள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் இவ்வாறு மார்பிங் போட்டோ வருவதை கடுமையாக கண்டித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் நாங்கள் ஜனநாயகவாதிகள் என்று கூறியுள்ளனர். இந்த கண்டனங்கள் அனைத்திற்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, " பிரணாப் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்று ஏற்கனவே பல அரசியல் பிரிவினை சக்திகள் சதிகள் செய்தன. அது எதுவும் வேலைக்கு வரவில்லை என்று இவ்வாறு புதிதாக கிளப்பிவிடுகின்றனர்" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.