கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் இன்று காலை தொடங்கியது. இந்த விவாதத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் காரசாரமாக பேசினர். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் திட்டமிட்டு கால தாமதம் செய்வதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என ஆளுநர் வஜூபாய் வாலா, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவை நிகழ்வுகளை கண்காணிக்க ஆளுநரின் செயலர் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். ஆளுநர் வஜூபாய் சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "முதல்வர் என்பவருக்கு பெரும்பான்மை எப்போதும் அவசியம்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமார் சட்டப்பேரவையில் வாசிக்க தொடங்கிய போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டன. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து வரும் நிலையில், இன்று இரவு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜக கட்சிகளின் தொடர் அமளி காரணமாக துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி, அவையை நாளை காலை 11.00 வரை ஒத்திவைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்றும், அது வரை அவையை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்தார். ஆளுநர் உத்தரவை மீறி சபாநாயகர் செயல்படுவதால், இந்த விவகாரத்தில் ஆளுநர் வஜூபாய் வாலா நேரடியாக தலையிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.