Skip to main content

பெகாசஸ் விவகாரம்: "தனியாக விவாதம் நடைபெறுவதை விரும்பவில்லை" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டிப்பு!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

supreme court

 

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருவதோடு, அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவருகின்றனர். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்து என். ராம், ஏசியாநெட் சசிகுமார் ஆகிய பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கு கடந்த ஐந்தாம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, "உளவு பார்க்கப்பட்டதாகச் சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை? 2019ஆம் ஆண்டுமுதல் ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளிவந்ததாகக் கூறப்படும்போது, தற்போது அவசரமாக கையாளுவது ஏன்? பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பத்திரிகை செய்திகளின் தன்மையை ஆராய்ந்த பிறகே விசாரணைக் குழு அமைக்க முடியும். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன என்பதில் சந்தேகமில்லை" என தெரிவித்ததோடு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

 

இந்தநிலையில் இன்று (10.08.2021) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெற வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கேட்டார். இதனைத்தொடர்ந்து, தனிப்பட்ட காரணங்களால் வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரிக்க முடியாதென தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார். இதனால் வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டது. அதேநேரத்தில் மனுதாரர் தரப்பில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கோரப்பட்டது. அதற்குத் தலைமை நீதிபதி, நோட்டீஸ் அனுப்புவது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்வதாக தெரிவித்தார்.

 

மேலும் இந்த விசாரணையின்போது, நீதிமன்ற விசாரணை தொடர்பாக மனுதாரர்கள் பொதுவெளியில் பேசுவதைக் கண்டித்தார். இதுதொடர்பாக அவர், "எங்களது கேள்விகளுக்கு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் மூலமே பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். நீங்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு வந்து வழக்கறிஞர்கள் மூலம் வாதாடுகிறீர்கள். இதனைத் தவிர வேறொரு விவாதம் நடைபெறுவதை விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்