
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஈரோட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், பசுக்களின் உணவுக்காக பயன்படும் தவிட்டிற்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டியில் 5 சதவீதம் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய பிரகாஷ் எம்.பி., “தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 20 kg வரை இலவச அரிசி வழங்கி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு 1கிலோ முதல் 25 கிலோ வரை பேக்கிங் செய்யப்படும் அரசி பைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதித்து ஏழை மக்களின் கஷ்டத்தை கூடுதலாக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டில், பசுமாடுகளின் உணவான அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் தவிடுக்கும் ஒன்றிய அரசு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளது. ஜி.எஸ்.டி வசூலில் சுமார் 64 சதவீதம் சாதாரண மக்களிடமிருந்து வருகிறது. 33 சதவீதம் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்தும், வெறும் 3 சதவீதம் மட்டுமே பெரும் பணக்காரர்களிடமிருந்தும் வருகிறது.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ஜிஎஸ்டி ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும், தேவையான உள்கட்டமைப்பு இல்லாமல் அதை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்றும் கூறினார். தற்போது மக்களுக்கு பெரும் சுமையை சுமத்திய ஒன்றிய அரசு இந்த 5% வரியை விலக்கிடுமா என்று ஒன்றிய நிதி அமைச்சகத்தை தமிழ்நாடு அரசு சார்பாக கேட்டுக்கொள்கிறேன். சாதாரண மக்களின் மீது பேக்கிங் அரிசி மற்றும் பசுக்களின் உணவுக்காக பயன்படும் தவிட்டிற்கும் சுமத்தியிருக்கும் ஜி.எஸ்.டி வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” என்றார்.