புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த கடலூரை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா, எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோரின்உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி, குற்றப்பிரிவு காவலர்கள் சத்தியவேலு, பிரேம்குமார், செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (23.03.2023) காலை 07.30 மணியளவில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சோதனை செய்தபோது, கிழக்கு பக்கமாக அமைந்துள்ள கழிப்பறை அருகில் பொதுமக்களுக்கும், கஞ்சா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கடலூர் திருப்பாப்புலியூரை சேர்ந்த குப்புசாமி மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (வயது 23), ராமலிங்கம் என்பவரது மகன் மேகி என்கிற மகேஷ் (வயது 21), வன்னியர்பாளையம் சிவசுப்பிரமணியம் மகன் ரேவந்த் (வயது 25), மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி மகன் ஆதித்தியன் (வயது 26) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1400 கிராம் கஞ்சா அடங்கிய 140 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சாமலகோட்டையை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கஞ்சா இலைகளை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற நடுவர் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.