மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுச்சேரி அரசின் சார்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதுச்சேரி வளர்ச்சிப் பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் ஜெ. சரவணன்குமார், தலைமைச் செயலாளர் ராஜு வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் அனைத்துத் துறைச் செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் படக் காட்சிகள் மூலம் மத்திய நிதி அமைச்சருக்கு விளக்கினர். இதில் புதுச்சேரி மாநிலத்தின் நிதி நிலைமை, எதிர்கால திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவி, மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரையில் மக்கள் சார்ந்த நலத்திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளுக்கு சென்று சேர வேண்டும். அதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எளிய மக்கள், சிறிய வர்த்தகர்கள், சிறு தொழில் புரிவோர் அதிக வட்டிக்கு பணம் வாங்கி சிக்கிக்கொள்கின்றனர். இதுபோன்ற நிலையை மாற்ற மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்றார்.
தலைமைச் செயலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பா.ஜ.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் என மனுக்களை அளித்தனர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அளித்த மனுவில், “புதுச்சேரி மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும்; புதுச்சேரிக்கான நிதிக் கொடையை ஒவ்வொரு வருடமும் 10% உயர்த்தி கொடுக்க வேண்டும்; புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 2047 கோடி வழங்க வேண்டும்; மத்திய சட்டப் பல்கலைக்கழகம், மருத்துவப் பல்கலைக்கழகம் உட்பட ஐந்து பிரிவுகளுக்கு நிதியை வழங்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை நிறைவேற்ற புதுச்சேரிக்கு மேலும் ரூபாய் 600 கோடி அதிகமாக வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் அளித்த மனுவில், “மத்திய உள்துறை அமைச்சர் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி மாநிலத்துக்கு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; புதுச்சேரிக்கு எனத் தனியாக கணக்கு தொடங்கி கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் நிர்வாக காரணங்களுக்காக மத்திய அரசால் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட 2 யூனியன் பிரதேசங்களும் 15 ஆவது மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்பேரவை உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசம் இதுவரை மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்படவில்லை. புதுச்சேரியை 16வது மத்திய நிதிக் குழுவில் சேர்க்க வேண்டும். இதனால் புதுச்சேரி மாநிலத்துக்கு கூடுதலாக சுமார் ரூபாய் 1500 கோடி மத்திய அரசின் நிதி சட்டப்படி கிடைக்க வாய்ப்பு உருவாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம் அளித்துள்ள மனுவில், “புதுச்சேரியை மத்திய நிதிக் குழுவில் இணைத்து மத்திய நிதி தொகுப்பில் இருந்து உரிய பங்கினை அளித்திட வேண்டும்; புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதிக் குழுவின்படி நிதி அளித்திட வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 275-ன் படி நிதி அளித்திட வேண்டும்; புது கணக்கு தொடங்கப்பட்ட போது இருந்த 1850 கோடியை திரும்ப செலுத்த வேண்டும்; புதுச்சேரியில் உள்ள 40 அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 114 மாதங்களாக ஊதியங்கள் நிலுவை உள்ளது. எனவே புதுச்சேரி நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு நிதி உதவி அளிக்க வேண்டும்; நலிவடைந்த நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்து தொழிலாளர் ஊதிய பிரச்சனையைப் போக்கிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.