
படப்பிடிப்பின்போது தனத வலது கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமலாபால், கனமழையால் சிக்கி தவிக்கும் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தானே சென்று வாங்கி அனுப்பி வைத்துள்ளார்.
அதோ அந்தப் பறவைப்போல என்ற படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். படப்பிடிப்பின்போது அமலா பாலின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சண்டைக்காட்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பூர்வீக மாநிலமான கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அந்தக் காயத்தில் இருந்து சற்று மீண்டு வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கனமழையையும் பொருட்படுத்தாமல் ராணுவம் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து மிகவும் துன்பப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக தேவையான பொருட்களை அமலாபால் வாங்கி அனுப்பியுள்ளார். அத்தியாவசிய பொருட்களை தானே நேரடியாக கடைக்கு சென்று வாங்கியுள்ளார். வலது கையில் காயம் ஏற்பட்டு, கட்டு போட்ட நிலையிலும், கேரள மக்களுக்காக நேரடியாக சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கியதை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அமலாபால் நிவாரணப் பொருட்கள் வாங்கும் புகைப்படங்களை மம்முட்டி உள்ளிட்டவர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளளனர். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.