மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அந்தவகையில், கடந்த ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளைக் காவல்துறையினர் இரும்பு தடுப்புகளையும், சிமெண்ட் தடுப்புகளையும் வைத்து அடைத்தனர்.
இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டத்தால் பயணம் மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயிகளுக்குப் போராட உரிமையுண்டு. ஆனால் அதற்காக காலவரையின்றி சாலைகளை முடக்கி வைத்திருக்கக் கூடாது என தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகள், சாலைகளை முடக்கி வைத்திருப்பதற்கு காவல்துறையினரே பொறுப்பு என தெரிவித்தனர். இந்தநிலையில், நேற்று (28.10.2021) இரவுமுதல் டெல்லி எல்லைகளான திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதிகளில் போலீசார் இரும்பு மற்றும் சிமெண்டு தடுப்புகளை அகற்றிவருகின்றனர். அதேபோல் காசிப்பூர் பகுதியில் தரையில் பதிக்கப்பட்ட ஆணிகளையும் போலீசார் அகற்றி வருகின்றனர்.