Skip to main content

பஜ்ரங் புனியாவுக்கு மிரட்டல்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 08/09/2024 | Edited on 08/09/2024
Police serious investigation for Bajrang Punia issue

ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் மல்யுத்த வீரர் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரசில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. முன்னதாக வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை சந்தித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் (06.09.2024) முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு பஜ்ரங் புனியா பேசுகையில், “அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். ஒவ்வொரு போராட்டத்திலும் காங்கிரசுடன் நிற்போம். பெண் மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பாஜகவின் பெண் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் துணை நிற்கவில்லை. ஆனால் காங்கிரஸ் எல்லா இடங்களிலும் எங்களுடன் துணை நின்றது” எனப் பேசியிருந்தார். அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியான அகில இந்திய கிசான் காங்கிரஸின் செயல் தலைவராக பஜ்ரங் புனியா நியமிக்கப்பட்டார். 

Police serious investigation for Bajrang Punia issue

இந்நிலையில் பஜ்ரங் புனியா தனக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ‘காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும்.  அவ்வாறு விலகாவிட்டால் உனக்கும், உனது குடும்பத்திற்கும் நல்லதல்ல. நாங்கள் யார் என்பதை விரைவில் காட்டுவோம். இதுவே முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை ஆகும்’ என வாட்ஸ் அப் வழியாக மர்ம நபர் மிரட்டல் வருவதாக பஜ்ரங் புனியா தரப்பில் அளித்த புகாரின் பேரில் பஹல்கர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து சோனிபட் காவல் நிலைய மக்கள் தொடர்பு அலுவலர் ரவீந்திர சிங் கூறுகையில், “வெளிநாட்டு எண்ணில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக பஜ்ரங் புனியா பஹல்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்ததால் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், “பஜ்ரங் புனியாவுக்கு மிரட்டல் செய்தி வந்தது குறித்து விசாரிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்