கர்நாடகா மாநிலம், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதோடு சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார்.
இதனையடுத்து, ஆளுநர் அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடகா முதல்வர் சித்தராமையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக, நீதிபதி நாகபிரசன்னா அமர்வில் விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்து ஆளுநரின் உத்தரவு செல்லும் என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, முடா வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீசாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் அளித்த புகாரின் பேரில், சித்தராமையா மீது மைசூர் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையா, இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி, 3வது குற்றவாளியாக சித்தாரமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, 4வது குற்றவாளியாக தேவராஜ் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.