ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் செப்டம்பர் 22ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் விவகாரம், பயங்கரவாத அச்சுறுத்தல், சீனாவின் செயல்பாடுகள், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இரு தலைவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் 24ஆம் தேதி அன்று ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 26ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.