மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மஹாவிகாஸ் அகாதி கூட்டணி பொறுப்பேற்றதிலிருந்து, அம்மாநில அரசின் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.

இதற்கு முன்பு பாஜக தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது, அரசு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற்று வந்தது. ஆனால் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மோடியின் புகைப்படங்கள் இடம்பெறுவதில்லை. இந்நிலையில் அரசு விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தையும் பயன்படுத்த வலியுறுத்தி மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அரசு விளம்பரங்களில் சேர்க்கப்படாதது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும். எனவே பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.