பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் (08/07/2021) விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் ஜோதிராதித்ய சிந்தியா, சோனாவால், நாராயணன் ரானே உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மத்திய அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (07/07/2021) காலை 11.00 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்தும், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் கூறுகின்றன. மேலும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெறவுள்ளவர்களின் பெயர் பட்டியல், பல்வேறு விவகாரங்கள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.