பீகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். காணொளி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பீகாருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமரின் தொகுப்பில் 10 பெரிய திட்டங்கள் பெட்ரோல் மற்றும் எரிவாயு தொடர்புடையதாகும். இந்த திட்டங்களுக்காக ரூபாய் 21,000 கோடி செலவிடப்பட இருந்தது. இதில் ஏழாவது திட்டத்தின் பணிகள் முடிக்கப்பட்டு பீகார் மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது.
பல லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் எரிவாயு சார்ந்த தொழில்கள் மற்றும் பெட்ரோலிய இணைப்பு உருவாக்குகின்றன. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவும், குழாய் மூலமான இயற்கை எரிவாயுவும் நாட்டின் பல நகரங்களை இன்றைக்கு சென்றடையும் நிலையில், பீகார் மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மக்களும் அதே போன்ற எளிதான முறையில் இதை பெற வேண்டும். உஜ்வாலா திட்டத்தின் காரணமாக நாட்டில் உள்ள 8 கோடி ஏழை குடும்பங்கள் தற்போது சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளன." இவ்வாறு பிரதமர் பேசினார்.
பைப்லைன் இணைப்பு திட்டம், எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலைகள் உட்பட மூன்று திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.