புதுச்சேரி லூயி பிரகாசம் வீதியில் வசிப்பவர் தேவநாதன் (வயது 49). இவர், பாரதி வீதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் ஒரு ஆண்டாக கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி திவ்யா (வயது27) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது கடையிலிருந்த நகைகளை சுத்தம் செய்வது போல் சிறிய சிறிய நகைகளை எடுத்து அவற்றை வேஸ்ட் பேப்பரில் சுற்றி வெளியே வீசுவது போல் வீசி, வீடு திரும்பும்போது வீட்டிற்கு எடுத்துச் சென்று அவற்றை தனது கணவரிடம் கொடுத்து அடமானம் வைத்து குடும்ப செலவுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வேஸ்ட் பேப்பர் போர்வையில் மட்டுமின்றி சுடிதார், சேலைகளிலும் மறைத்து சிறிய முடிச்சுப்போட்டு நகையை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது கடையில் இருந்த நகைகளை தேவநாதன் எடை வாரியாக சரி பார்த்தபோது 12 பவுன் நகைகளும் 400 கிராம் வெள்ளி பொருட்களும் குறைவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது திவ்யா இதுபோன்ற நூதனமாக நகைகளை திருடிச் செல்வதை கண்டுபிடித்த தேவநாதன், திவ்யாவை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
பின்னர் திவ்யாவிடமும் அவரது கணவரிடமும் திருடிச் சென்ற நகைகளை உடனடியாக திருப்பி கொடுத்து விடுமாறு கேட்டுள்ளார். அவர்களோ குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்தால் அடமானத்தில் உள்ள அனைத்து நகைகளையும் திருப்பித் தந்துவிடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நகையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நகை திருட்டு போன சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் நகைக் கடை உரிமையாளர் தேவநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே தலைமறைவாகிவிட்ட தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.