கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து, டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆளுநர்களுடனான ஆலோசனையில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனையின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். கரோனாவுக்கு எதிரான போரில் ஆளுநர்கள் முக்கியத் தூண்களாக இருக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம். நாட்டின் தடுப்பூசித் திருவிழா மூலம் தடுப்பூசி மையங்கள் அதிகரித்துள்ளது" என்றார்.