தென் மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை, மிக கனமழை, அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலை (ஜூலை 24 முதல் ஜூலை 28) வரை தேதி வாரியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசுகளை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளைய தினமான வியாழக்கிழமை (ஜூலை 25) ஆம் தேதியில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாநிலங்களை குறித்து பார்ப்போம். இதில் லட்சத்தீவு, தெலுங்கானா, சத்தீஸ்கர், கிழக்கு உத்தரபிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், அருணாச்சல், அசாம்,மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், கோவா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே தினத்தில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி, மேற்கு உ.பி.யில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையால் வடகிழக்கு மாநில மக்கள் சுமார் 1 கோடி பேர் பதிக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை என்பது மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 50 லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இது வரை பருவ மழையால் 150- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற காசிரங்கா வன விலங்குகள் சரணாலயம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், யானைகள், மான்கள், காண்டாமிருகங்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன. மழையால் ஏற்கனவே கடுமையாக வட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.