வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து உம்பன் புயலாக உருவாகியுள்ளது. முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் என கணிக்கப்பட்ட இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த புயல் நாளை மறுநாள் மாலை மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்றின் வேகத்துடன் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக தமிழகத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உம்பன் புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.