கர்நாடகா மாநிலம், பெங்களூர் கோரமங்களா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் கிருதிகுமாரி (24). பட்டதாரியான இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி இரவு, கிருதிகுமாரி தங்கியிருந்த 3வது மாடிக்கு வந்த ஒரு மர்ம நபர் கிருதிகுமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், விடுதியில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்,கிருதிகுமாரியை விடுதிக்குள் புகுந்து அடையாளம் தெரியாத மர்ம நபர், கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து அங்கிருந்து தப்பி ஓடிய காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியிருந்தது. இதன் மூலம், தப்பியோடிய கொலையாளியின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தியதில், கொலை செய்தவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் பல பகீர் தகவல்கள் கிடைத்தது. அதில், அபிஷேக்கும், கிருதிகுமாரியுடன் தங்கியிருந்த ஒரு இளம்பெண்ணும் பெங்களூரில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் காதலித்து ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். அதன் பின்னர், கடந்த மாதம் அபிஷேக் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், அபிஷேக்கிற்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், அந்த இளம்பெண் அபிஷேக்கிடம் இருந்து விலகி, கிருதிகுமாரியுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் ஒரே விடுதியில் தங்கியுள்ளார்.
அங்கு அபிஷேக்குடனான காதலை கைவிடும்படி கிருதிகுமாரி, அந்த இளம்பெண்ணுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, விடுதி காவலாளி வெளியே சென்ற பின்னர் உள்ளே புகுந்து காதலி தங்கியிருந்த அறையை தட்டியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண் இல்லாததால் கிருதிகுமாரி கதவை திறந்துள்ளார். உடனடியான வாசலில் நின்ற அபிஷெக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கிருதிகுமாரின் கழுத்தை அறுத்தும், குத்தியும் கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியதாக தெரியவந்தது.
ஆள்மாறாட்டத்தால் கிருதிகுமாரி கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதலியிடம் காதலை விடச் சொல்லி அறிவுரை வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிஷேக்கை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று மத்தியப் பிரதேசத்தில் அபிஷேக் கைது செய்யப்பட்டார். மேல்விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். கிருதிகுமாரியை அபிஷேக் கத்தியால் குத்தி கழுத்தை அறுப்பது போன்ற வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.