அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகளை ரயில் நிலையத்தில் வைத்தே டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நெல் மற்றும் கரும்பிற்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகளுடன் திரளாகச் சென்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், திரளாக வந்த விவசாயிகளை ரயில் நிலையத்தில் வைத்தே டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் ரயில் நிலையத்திலேயே போராட்டத்தை தொடங்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.