Skip to main content

“ராமரின் சிந்தனைகள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பாதை அமைக்கும்” - ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி கடிதம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
PM Modi's letter to the President about ram temple

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம்(22.1.2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். அதன் பிறகு, கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. 

இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு கடந்த 21 ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டமான சூழ்நிலை நிலவுவதாகும், பிரதமர் மோடி கடைப்பிடித்து வந்த 11 நாள் விரதத்துக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேற்று (23-01-24) பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ஜனாதிபதியின் கடிதத்தை பெற்றபோது நான் வேறு மனநிலையில் இருந்தேன். அந்த உணர்வுகளை கையாள்வதற்கு அவரது கடிதம் ஆழ்ந்த வலிமையையும் ஆதரவையும் அளித்துள்ளது. ஜனாதிபதியின் வாழ்த்துகளுக்கு நன்றி. 

என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களைப் பார்த்த பிறகு, அயோத்தியில் இருந்து திரும்பியதும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். என்னைவிட்டு எப்போதும் பிரிக்க முடியாத அயோத்தியை என் இதயத்தில் சுமந்து கொண்டு திரும்பி இருக்கிறேன். நான் அயோத்திக்கு ஒரு பக்தனாக சென்றேன். அங்கு சென்ற பிறகு எண்ணற்ற உணர்வுகளால் என் மனம் நிறைந்துள்ளது. ஏராளமான மக்களின் நூற்றாண்டு கால போராட்டங்களுக்கு பிறகு பால ராமர் தான் பிறந்த இடத்தில் மீண்டும் அமர்ந்துள்ளார்.

பல நூற்றாண்டு காத்திருப்பு முடிவுக்கு வர நான் ஒரு கருவியாக இருந்தது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கிறது. இதை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மக்களுடன் பால ராமரை பார்த்ததும் வரவேற்றதும் அற்புதமான தருணமாக இருந்தது. ராமர் அருளால் தான் இது சாத்தியமானது. ராமரின் முடிவில்லாத சிந்தனைகள், இந்தியாவின் வளமான எதிர்காலத்துக்கு அடித்தளமாக அமையும். அந்த சிந்தனைகளின் வலிமை, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க மக்களுக்கு பாதை அமைக்கும். வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான புதிய முன்னுதாரணத்தை உருவாக்க ராமர் கோவில் தொடர்ந்து நமக்கு உத்வேகம் அளிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

சார்ந்த செய்திகள்