
நாகாலாந்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாகாலாந்தில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மீது தவறுதலாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேரும், தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் காயமடைந்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் என சந்தேகித்து பழங்குடியின மக்கள் மீது இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் முகாமை பழங்குடி மக்கள் சுற்றிவளைத்து போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடித்துக் கொண்டிருப்பதால் இணையதள சேவை என்பது அந்த பகுதியில் முடக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே நாகாலாந்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்த நிலையில், தமிழக நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு திடீர் பயணமாக தற்போது அவர் டெல்லி புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.