உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மனைவியின் சடலத்தை ஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு கணவர் ஒருவர் தோளிலேயே சுமந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டத்தில் உள்ள சரோடா கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சாமுலு. இவருடைய மனைவியின் பெயர் இடுகுரு. அண்மையில் மனைவி இடுகுருவிற்கு உடல்நிலை சரியில்லாததால் ஒடிசாவில் தேவையான சிகிச்சை முறைகள் இல்லை என மனைவியை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வந்துள்ளார் சாமுலு.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் இடுகுருவிற்கு சிகிச்சை நடைபெற்றது. ஆனால், இறுதியில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இறக்கும் தறுவாயில் இருந்த மனைவியை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதனால் உடல்நிலை சரியில்லாத மனைவியை அழைத்துக்கொண்டு பேருந்தில் செல்ல முடியாது என்பதால் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார் சாமுலு. அப்பொழுது விஜயநகரம் அருகே மனைவி இடுகுரு உயிரிழந்துவிட்டார். இதனால் ஆட்டோ ஓட்டுநர் பாதி வழியிலேயே மனைவியின் சடலத்துடன் சாமுழுவை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சாமுலு, மனைவியின் உடலை தோளிலேயே தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அந்த பகுதியிலிருந்த மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.