தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிப்பதாகக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காற்று மாசு மற்றும் கரோனா பாதித்தவர்களைக் கருத்தில்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதற்குத் தடைவிதித்து வருகின்றன. ஏற்கனவே, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ள சூழலில், தற்போது கர்நாடகாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "கரோனா மற்றும் பிற காரணங்களால், இந்த ஆண்டு தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதைத் தடை செய்ய முடிவு செய்துள்ளோம். அனைவரும் விவாதித்து ஒருமனதாக இம்முடிவை எடுத்துள்ளோம். விரைவில் இதற்கான அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டு மொத்த பட்டாசு உற்பத்தியில், 90 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவர் எனத் தமிழகத்தில் கருத்து எழுந்துள்ள சூழலில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.