நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசிய வீடியோ ஒன்று சில தினங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பான வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அணுகுண்டு வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா மரியாதை கொடுக்க வேண்டும். நாம் அவர்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால், இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்த நினைப்பார்கள். அவர்களிடம் பேச வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, நாம் நமது இராணுவ வலிமையை அதிகப்படுத்துகிறோம். இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. ஒரு பைத்தியக்காரன் இந்தியாவில் குண்டுகளை வீச முடிவு செய்தால் என்ன நடக்கும்?
அதே போல ஒரு பைத்தியக்காரன் லாகூரில் வெடிகுண்டு வீச முடிவு செய்தால், அதன் கதிர்வீச்சு அமிர்தசரஸை அடைய 8 வினாடிகள் எடுக்காது” என்று பேசியுள்ளார். ஆனால், இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் பதில் அளித்தது. இந்த வீடியோவை பா.ஜ.க பகிர்ந்து கடும் விமர்சனம் செய்து வந்தனர். அந்த வகையில், பிரதமர் மோடி, மணிசங்கர் அய்யரை விமர்சனம் செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுக்கு பயந்து அதன் அணுசக்தியைப் பற்றிய கனவுகளைக் கொண்ட தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்றால் நாட்டையே அணிய வைப்போம். அவர்களிடம் உணவு தானியங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும். இப்போது, அவர்களிடம் போதுமான வளையல்கள் கூட இல்லை என்பது எனக்குத் தெரியும்.
ஆனால், கோழைகளும், பயமுறுத்தும் மக்களும் நிறைந்த எதிர்க்கட்சிகள், தீவிரவாதத்தில் பாகிஸ்தானுக்கு க்ளீன் சிட் கொடுக்கும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளில் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகளை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். நமது அணு ஆயுதக் கிடங்குகள் தகர்க்கப்பட வேண்டும் என்று அவர்களின் இடதுசாரி கூட்டணியினரும் விரும்புகிறார்கள். அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் ஏன் கத்துகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, பள்ளி பையில் இருந்த ரூ.35 லட்சத்தை மட்டுமே அமலாக்கத்துறை கைப்பற்றியது. நாங்கள் பொறுப்பேற்றதில் இருந்து, ஏஜென்சி ரூ.2,200 கோடியை மீட்டுள்ளது. இதற்கு 70 சிறிய லாரிகள் தேவை” என்று கூறினார்.