இந்தியா முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள சூழலில் மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் இணைய வேகம் குறைய வாய்ப்புள்ளதாக செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 700 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 பேரும், கேரளாவில் 110 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு 21 நாட்கள் லாக்டவுன் அறிவித்துள்ள சூழலில், வீட்டில் இருக்கும் மக்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை இணையத்தளங்களிலேயே செலவழிக்கின்றனர்.
பாடல்கள் கேட்பது, படம் பார்ப்பது என வீட்டில் இருக்கும் இந்த நேரத்தை பெரும்பாலும் மொபைல் போன்களுடனேயே செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் இணைய வேகம் குறைய வாய்ப்புள்ளதாக செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்யூஸ், "நமது மொத்த இணையத் திறனில் 30-35 சதவீதம் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைக்காக தான் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாகப் பல வாடிக்கையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளையும் கூட ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்வதால் அலைவரிசை பயன்பாடு அதிகரித்திருக்கிறது. டேட்டா பயன்பாடு அதிகரிப்பால் செல்போன் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான சுமை அதிகரித்துள்ளது.
இதனால் இணையத்தள வேகம் குறைந்துள்ளது. இதன் விளைவாக வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைன் கல்வி, பணப் பரிமாற்றம், ஆன்லைன் மருத்துவ சேவைகள் போன்ற முக்கியமான சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த அமைப்பு OTT பிளாட்ஃபார்ம்களுக்கு இதுதொடர்பாக கோரிக்கை வைத்தநிலையில் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்களது வீடியோ தரத்தைக் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.