ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு தஜிகிஸ்தானில் இன்று (17/09/2021) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொளி மூலம் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றம் சட்ட விரோத ஆயுதம், போதைப்பொருள் கடத்தலுக்கு வழிவகுக்கும். நிச்சயமற்ற நிலை மற்றும் அடிப்படைவாதம் ஆப்கானிஸ்தானில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்து விடும். அடிப்படைவாத கொள்கைகளை உலகம் முழுவதும் ஊக்கப்படுத்த ஆப்கானிஸ்தானில் சூழல் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளைப் பெருமளவில் பாதிக்கும். அந்நாட்டில் பெண்கள், சிறுபான்மையினர், சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவம் அவசியம். ஆப்கானிஸ்தானைப் பார்த்துப் பிற பயங்கரவாத அமைப்புகள் வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற ஊக்கம் பெறலாம். எந்த நாட்டிலும் பயங்கரவாதத்தைப் பரப்ப ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
எஸ்.சி.ஓ.வில் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.