ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அசோக் கெலாட் ஆட்சியையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதன்படி, சில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து, நேற்று (02-10-23) இரண்டாவது முறையாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி, சித்தோர்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “ ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி காங்கிரஸ் வெற்றிகரமாக ஆட்சி அமைத்துவிட்டது. ஆனால், அந்த ஆட்சியை முறையாக நடத்த அவர்கள் தவறவிட்டார்கள். ராஜஸ்தானில் ஒருவேளை பா.ஜ.க அமைந்துவிட்டால், தன்னால் முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்களை நிறுத்த வேண்டாம் என அசோக் கெலாட் பேசியிருப்பது மூலம் காங்கிரஸின் தோல்வியை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இதனால், காங்கிரஸை வீட்டிற்கு அனுப்பும் கவுண்டவுன் ஆரம்பமாகி விட்டது. மீண்டும் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தான் மாநிலத்தைச் சீரழித்து விட்டது. குற்றங்களில் எண்ணிக்கை பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடமாக இருப்பது எனக்கு மிகுந்த வலியைத் தருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலானவை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தான் வருகிறது. இதற்காகவா நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள்?. நாட்டின் உள்ள பெண்களுக்கு எதிராக எங்கு கொடுமை நடந்தாலும் நான் வேதனைப்படுகிறேன். ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் இதை பாரம்பரியமாகவே மாற்றி வைத்துள்ளனர். ராஜஸ்தானில் ஒவ்வொரு பெண்களும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்று நினைக்கிறார்கள். அதனால், பா.ஜ.க ஆட்சிக்கு வரும் போது ஒவ்வொரு பெண்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் கொண்டு வரும்” என்று கூறினார்.