கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில், இன்று (25-01-24) தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, இளம் வாக்காளர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், “அடுத்த 25 ஆண்டுகளில் நாடு மற்றும் உங்களின் எதிர்காலத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். உங்களின் வாக்கு எதிர்கால இந்தியாவையும், நாட்டின் பாதையையும் நிர்மாணிக்கும் சக்தி பெற்றவை. நாட்டின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும்போது, அரசு எடுக்கும் கொள்கை மற்றும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். மேலும், நிலையான அரசு பெரிய முடிவுகளை எடுக்கும். அந்த வகையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சனைகளை பா.ஜ.க அரசு தீர்த்து வைத்துள்ளது.
உலகத் தலைவர்களை சந்திக்கும்போது, நான் மட்டும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதாக கருதவில்லை. 140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதாக உணர்ந்துகொண்டு தான் அவர்களை சந்திக்கிறேன். கடந்த 10,12 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் நிலவிய சூழ்நிலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. ஆனால், இன்று வெற்றிக் கதைகள் குறித்து பேசப்படுகிறது. இளைஞர்களின் கனவுதான் எனது இலட்சியம். இது மோடியின் வாக்குறுதி” என்று கூறினார்.