
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் தொடங்கும் இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடர், இந்த முறை சற்று தாமதமாக டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தொடங்கும் இந்தக் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பலவற்றைக் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஜி20 மாநாடு நடத்தும் பொறுப்பு நமக்குக் கிடைத்துள்ள நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது மிகவும் முக்கியமானது என்றார். மேலும், இந்தக் கூட்டத்தொடரில் விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.