குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவி வந்தது.
தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி, 2013, 2015, 2020 எனத் தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி அமைத்தது. மாநிலக் கட்சியான ஆம் ஆத்மி கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, டெல்லியைத் தாண்டி கோவாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் பஞ்சாபில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியையும் அமைத்தது. இதனால் பெரிய எதிர்பார்ப்பில் ஆம் ஆத்மி உள்ளது. இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை காலை குஜராத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்க உள்ளது.