இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதிக்குள் பிரதமர் மோடி அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த அமெரிக்கப் பயணத்தின் போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கலாம் எனவும் தகவலறிந்த அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை பிரதமர் மோடி, ஜோ பைடனை சந்தித்தால் அது இருவரும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ளும் முதல் நிகழ்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், மோடி- பைடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கச் செல்லும் பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது வருடாந்தர அமர்விலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.