Skip to main content

புதிய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் குறிக்கோள்கள் நிறைவேறும் - அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர்..

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

pm modi

 

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்துக்கு டெல்லியில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.  இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை, ரூபாய் 971 கோடி செலவில் 'டாடா' நிறுவனம் கட்ட உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகில், 'சென்ட்ரல் விஸ்தா' திட்டத்தில் இப்புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

 

சுயசார்பு திட்டத்தின் கீழ் 64,500 சதுர மீட்டரில் அமைய உள்ள, இந்தப் புதிய கட்டிடம் 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்பாக, கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஒரே நேரத்தில் 1,200- க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வலிமையுடன் புதிய கட்டிடம் எழுப்பப்படவுள்ளது. தரைதளம், தரைக்குக் கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. 

 

காகிதப் பயன்பாட்டுக்கு அவசியமில்லாத வகையில், புதிய கட்டிடத்தில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. நூலகம், எம்.பி.களுக்கான ஓய்வறைகள், நிலைக்குழு அலுவலகங்கள் உள்ளிட்டவை புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமருக்கான சிறப்பு நுழைவு வாயில்களுடன் சேர்த்து ஆறு நுழைவு வாயில்களைக் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடம், முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 120 பிரதான அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு எம்.பி.க்கும் 40 சதுர மீட்டர் அளவில் அலுவலக அறை ஒதுக்கப்பட உள்ளது. டாடா நிறுவனம் கட்டும் இந்தக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்த பின், தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் தொல்பொருள் சொத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் இந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றியதாகவும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், 21 -ஆம் நூற்றாண்டின், இந்தியாவின் லட்சியங்கள் நிறைவேறும் எனவும் கூறினார்.

 

pm modi

 

பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசியதாவது, "இந்தநாள், இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல். இந்திய மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து, இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை எழுப்புவோம். இப்போதிருக்கும், நாடாளுமன்றக் கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிற்குப் புதிய திசையைக் கொடுத்தது. இப்புதிய நாடாளுமன்றக் கட்டிடம், சுயசார்பு இந்தியா உருவாக்கப்படுவதற்கான ஆதாரமாகத் திகழும். பழைய நாடாளுமன்றக் கட்டிடம், இந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றியது, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 21 நூற்றாண்டின் இந்தியாவின் லட்சியங்கள் நிறைவேறும். 

 

இந்தியாவில், ஜனநாயகம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில், ஜனநாயகம் என்பது ஒரு கலாச்சாரம், ஒரு வாழ்க்கை முறை. இந்தியா என்ற நாட்டின் உயிராக, ஜனநாயகம் இருக்கிறது. வேறுபட்ட பார்வைகளும், வேறுபட்ட கோணங்களும் இந்தியாவின் ஜனநாயகத்தை துடிப்பானதாக வைத்திருக்கிறது. இங்கு வேறுபாடுகளுக்கு இடமிருக்கிறது. ஆனால், ஒரு போதும் பிரிவு இருக்கக்கூடாது. நமது ஜனநாயகம், அதன் லட்சியத்தோடு முன்னேறும்" இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.  

 


 

சார்ந்த செய்திகள்