தலா 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்திலும், ஜம்மு காஷ்மீரிலும் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார். அதே போல், ஹரியானாவில் பா.ஜ.க 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி, பதவி நீடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதிகள் வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று (09-10-24) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ், இப்போது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. ஒவ்வொரு நாளும், மக்கள் மனதில் வெறுப்பு விதைகளை விதைக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸின் மோசமான நோக்கங்களை உணர்ந்தார். அதனால்தான் அவர் கட்சியை உடைக்க விரும்பினார்.
காங்கிரஸ், எளிதான வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, மூன்றாவது பதவிக் காலத்தை எங்களுக்கு கொடுத்ததன் மூலம் நாட்டின் மனநிலையை ஹரியானா பிரதிபலித்துள்ளது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பிளவை உருவாக்க காங்கிரஸ் முயன்றது. இருப்பினும், பா.ஜ.கவின் கொள்கைகளையும், ஆட்சியையும் மக்கள் நம்புகின்றனர். காங்கிரஸ், முஸ்லிம்கள் மனதில் அச்ச உணர்வை உருவாக்கி வருகிறது. தங்கள் வாக்குக்காக, காங்கிரஸ் நாட்டை வகுப்புவாதமாக்குகிறது.
காங்கிரஸ் முற்றிலும் வகுப்புவாத மற்றும் சாதிய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதும், அதை வெற்றிக்கான சூத்திரமாக்குவதும் தான் காங்கிரஸின் அரசியலின் அடிப்படை. காங்கிரஸ், சனாதன பாரம்பரியத்தை நசுக்குகிறது” என்று கூறினார்.