இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி, சமீபத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அம்மாநில - மாவட்ட அதிகாரிகளோடு கரோனா நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்தொடர்ச்சியாக, பிரதமர் மோடி இன்று (20.05.2021) கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் கள அதிகாரிகளோடு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவுள்ளார்.
பிரதமர் தலைமையிலான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நீண்ட நாட்களாக புறக்கணித்துவந்த மம்தா, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.