இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிற்குச் செல்லும் பிரதமர் மோடி, இம்மாதம் 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடத்த இருக்கும் குவாட் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய பிற குவாட் நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் தங்கள் நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது, கரோனாவுக்கு எதிராக போராடுவது, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றில் கூட்டாக செயல்படுவது, சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியம் ஆகியவை தொடர்பாக நான்கு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.
அதன்பின்னர் பிரதமர் மோடி, இம்மாதம் 25ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபையின் 76வது அமர்வின் உயர்மட்ட பிரிவு பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.