பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. 29 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பலவற்றைக் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஜி20 மாநாடு நடத்தும் பொறுப்பு நமக்குக் கிடைத்துள்ள நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது மிகவும் முக்கியமானது என்றார். மேலும், இந்தக் கூட்டத்தொடரில் விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், மாநிலங்களவை சபாநாயகராக துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு நாடாளுமன்றத்தில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்த அவை மற்றும் நாட்டின் சார்பாக சபாநாயகர் ஜகதீப் தங்கருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு தடைகளைச் சந்தித்து நீங்கள் இந்த நிலையை அடைந்து உயர்ந்து கொண்டு செல்கிறீர்கள். இது நாட்டு மக்கள் சிலருக்கு உத்வேகமாக இருக்கும்.
நமது துணை குடியரசு தலைவர் விவசாயி மகன். அவர் ராணுவப் பள்ளியில் பயின்றுள்ளார். ஆகையால், அவர் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறார். நமது துணை குடியரசு தலைவருக்கு சட்டத்துறையிலும் நல்ல அறிவு உள்ளது. நமது ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன்” என உரையாற்றினார்.