Skip to main content

மணிப்பூர் தொடர்பான பொதுநல வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

PIL regarding Manipur related in Supreme Court

 

அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாட்டினர் மணிப்பூரில் குடியேறுதலைத் தடுத்தல், போதைப்பொருள் விளைவித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்ட சமுதாயத்தினர்தான் செய்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில், ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தலைமை நீதிபதி சந்திர சூட் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில், “மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஏராளமான வழக்குகள் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் போதைப்பொருள் விளைவித்தலைத் தடுத்தல், அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறுவதைத் தடுப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்பது என்பது மிகவும் கடினமானது. அந்த மனுவில் குறிப்பிட்ட சமூகத்தினரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். மேலும் அவர்களைத் தீவிரவாதிகளைப் போல் உருவகப்படுத்தி இருக்கிறீர்கள். இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

மணிப்பூர் வன்முறையில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது நடந்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வலியுறுத்திய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளார். மேலும், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிப்பது கடினம் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்தப் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுநல மனுவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டும் கடுமையாகக் குறை கூறுவது சரியல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்