இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மெல்லக் குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே மணாலி போன்ற சுற்றுலாத் தலங்களிலும் சந்தைகளிலும் மக்கள் கூட்டமாகக் குவிந்துள்ள புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததையும் காண முடிந்தன. இதனைத்தொடர்ந்து மத்திய அரசும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும் மக்கள் கூட்டமாகக் கூடுவது குறித்து கவலை தெரிவித்தன.
இந்நிலையில் கரோனா நிலை குறித்து எட்டு வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், மலைவாசஸ்தலங்களிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் கூடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, " கரோனாவால் சுற்றுலாவும், வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் மலைவாசஸ்தலங்களிலும், சந்தைகளிலும் பெருங்கூட்டம் கூடுவது சரியல்ல என இன்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "வைரஸ் தானாக வந்து செல்வதில்லை. அதிக கூட்டம் கூடுவது போன்ற கவனக்குறைவான நடத்தைகளால் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் தொடர்ந்து நம்மை எச்சரித்து வருகின்றனர். மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கரோனாவின் மூன்றாவது அலையைத் தவிர்க்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவதற்கான அவசியத்தைச் சுட்டிக்காட்டியதோடு, சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்குமாறும் வலியுறுத்தினார்.