தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடும் சூழலில் அசுத்தமான நீரைக் குடித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜீரம் கிராமம். அத்தியாவசிய தேவைகள் எளிதில் கிடைத்திடாத இந்த கிராமத்தில், கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக குடிநீர்ப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இதனால், இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அசுத்தமான நீரைக் குடித்து வாழவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேசுகையில், இந்த கிராமத்தில் எந்தவிதமான அத்தியாவசிய வசதிகளும் கிடையாது. அரசு செலவில் கட்டித்தரப்பட்ட கழிவறைகளைப் பயன்படுத்தக்கூட இங்கு தண்ணீர் கிடைக்காத அவலநிலைதான் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.
குடிநீருக்காக கொளுத்தும் வெயிலில் பல கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலை இருப்பதால் இந்தப் பகுதி மக்கள், அருகில் கிடைக்கும் அசுத்தமான நீரையே அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பல பகுதிகளில் கல்வி, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அன்றாட மற்றும் அத்தியாவசிய வசதிகள் கிடைப்பதில்லை என்ற தகவல் பரவிவரும் சூழலில், இந்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.