பேடிஎம் ஐ.பி.ஓ. வெளியீடு திங்களன்று (09.11.2021) தொடங்கியது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஐ.பி.ஓ. வெளியீடாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரே அடியாக 18,300 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டமிட்டு களமிறங்கியுள்ளது பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ். பொதுப்பங்கு வெளியீட்டின் முதல் நாளான நேற்றே 18 சதவீதம் சந்தா செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒதுக்கப்பட்ட 89 லட்சத்து 98 ஆயிரத்து 76 பங்குகளில் 43 லட்சத்து 65 ஆயிரத்து 420 பங்குகள் சில்லரை விற்பனை பகுதிக்கு சந்தா செலுத்தப்பட்டது. மொத்த பொதுப்பங்குகளின் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சத்து 89,422 ஆகும்.
பேடிஎம் நிறுவனம் திரட்டவுள்ள 18,300 கோடி மொத்த முதலீடு 8,300 கோடி ரூபாய் மதிப்பிற்கு புதிய ஈக்விட்டி பங்குகள் வழங்குவதையும், தற்போதுள்ள அந்நிறுவன பங்குதாரர்களால் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனைக்கான சலுகையையும் (ஓஎப்எஸ்) கொண்டுள்ளது. ஒரு பங்குக்கு 2,149 ரூபாய் என்ற விலையில் சந்தா செலுத்திய ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்கனவே 8,235 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. பிளாக்ராக், கனடா பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு, சிங்கப்பூர் மற்றும் அபுதாபி சவ்ரின் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.
ஐ.பி.ஓ. ஒரு பங்கின் விலை 2,080 முதல் 2,150 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி (புதன்கிழமை) வரை சந்தா பெற முடியும். சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட் முதல் அதிகபட்சம் 15 லாட் வரை ஏலம் கோரலாம். ஒரு லாட் என்பது 6 பங்குகள் ஆகும். அதன்படி, ஐ.பி.ஓ. வெளியிடப்பட்ட நேற்று, முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 சதவீதமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 2 சதவீதமும் சந்தா செலுத்தப்பட்டது. மேலும், தகுதி வாய்ந்த (கியூஐபி) முதலீட்டாளர்கள் மூலம் 2.63 கோடி பங்குகளில் 16.78 லட்சம் பங்குகள் ஏலம் எடுத்துள்ளனர்.
பேடிஎம் நிறுவனம், தனது 18,300 கோடி ரூபாய் ஐ.பி.ஓ.வில் 50 சதவீத பங்குகளை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்துவருகிறது. அதேநேரம், இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக உள்ள சீனாவின் ஆன்ட் குரூப் மற்றும் ஜப்பான் சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருந்த பெரும் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் நிறுவனம் என்பதால், முதலீட்டாளர்களிடையே பேடிஎம் ஐ.பி.ஓ. மீது பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.