Skip to main content

தொடரும் சம்பவம்; பணியில் இருந்த பெண் மருத்துவர் மீது தாக்குதல்!

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
Patient beaten woman doctor in Andhra Pradesh

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர்  ஆகஸ்ட் 9 ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாடுமுழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ஆந்திராவில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மருத்துவர் ஒருவர் பணியில் இருந்த போது, பங்காரு ராஜு என்ற நோயாளி பின்னால் இருந்து வந்து எதிர்பாராத விதமாக மருத்துவரின் தலை முடியைப் பிடித்து அருகில் இருந்த கட்டில் கம்பியில் மோத முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற மருத்துவர்கள்  நோயாளியிடம் இருந்து பெண் மருத்துவரைக் காப்பாற்றியுள்ளனர். இது குறித்து மருத்துவமனையின் இயக்குநருக்கு கடிதம் எழுதிய  பெண் மருத்துவர், இந்த சம்பவம் பணியிடங்களில் பாதுகாப்பு பற்றிய தீவிர கவலையை ஏற்படுத்தி உள்ளது.  நோயாளி தாக்கும் போது பாதுகாவலர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை என்று  குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மருத்துவனைவில் பணியாற்றும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கனவே, மருத்துவ மாணவி கொலை தொடர்பாக மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது பணியில் இருந்த பெண் மருத்துவர் மீது நோயாளி தாக்குதல் நடத்திய சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. 

சார்ந்த செய்திகள்