மின்சார வாகனங்களில் தீ விபத்து நேரிடலாம்; ஆனால் மற்ற எரிபொருட்களின் இயங்கும் வாகனங்களை விட விபத்து குறைவு என ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்களில் தீப்பிடிப்பது குறித்த தகவல் அடிக்கடி வெளியாகிறது. இது குறித்து ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மின்சார வாகனங்களில் தீ விபத்து நேரிடக்கூடும். ஆனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளிலும் இது நடக்கிறது. பெட்ரோல் உள்ளிட்ட மற்ற எரிப்பொருட்களில் இயங்கும் வாகனங்களோடு ஒப்பிடும் போது, மின்சார வாகனங்களில் தீப்பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது என பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டாடா நிறுவனத்தின் நெஸோன் வாகனம் மும்பை அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதுவரை மின்சார இரு சக்கர வாகனங்கள் மட்டுமே தீப்பிடித்த நிலையில், முதன்முறையாக கார் தீப்பிடித்திருக்கிறது. வாகனத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன. இருந்தாலும், ஏன் தீப்பிடித்தது என்பது குறித்து விசாரிக்கவிருக்கிறோம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது.