மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதனிடையில், இந்த கலவர சம்பவங்களால் மணிப்பூர் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாமல் முடங்கிப் போனது. கடைசியாக மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 3ஆம் தேதியில் நிறைவடைந்தது. 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே, கடந்த 21ஆம் தேதி சட்ட சபையை கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அந்த மாநில ஆளுநர் மாளிகையில் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், குக்கி சமுதாயத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மணிப்பூரில் நிரந்தர அமைதி மற்றும் தீர்வை மீட்டெடுப்பதற்காக இந்திய அரசியலமைப்பின் படி தனி நிர்வாகத்தை உருவாக்குவதற்கு சட்டப்பூர்வமான கோரிக்கையை வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மைத்தேயி சமூகத்தினர் அதிகம் வாழும் இம்பாலில் தான் சட்டமன்றம் உள்ளது. அதனால், தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில், அந்த பகுதிக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்று சட்டசபை கூட்டத்தொடரை கூட்டாக சேர்ந்து அவர்கள் புறக்கணித்துள்ளனர். அவர்களில், 7 பேர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அதில் பா.ஜ.க அமைச்சர் நெம்சா கிப்ஜென், ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள இயலாது என்று விடுப்பு எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு மணிப்பூர் சட்டசபையில் ஒரு நாள் சிறப்பு கூட்டம் நேற்று கூடியது. சபை தொடங்கியவுடன் கலவரத்தில் இறந்த மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதில், “மணிப்பூர் கலவரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் அமைதியாக வாழ்வதற்கு முன்னுரிமை கொடுப்போம். மக்கள் வன்முறையை கைவிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும். எந்தப் பிரச்சனைக்கும் அமைதியின் மூலமாக தீர்வு காண உறுதி கொள்வோம்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டியிருந்தது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஓக்ராம் இபோபிசிங் தலைமையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், கூட்டத்தொடரை ஐந்து நாட்கள் நடத்தும்படி வலியுறுத்தினர். தொடர்ந்து, அவர்கள் கோஷமிட்டதால் முதலில் அரை மணி நேரத்திற்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடிய போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளி காரணமாக, சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சத்யபிரதா சிங் அறிவித்தார். இதனால், சபை கூடிய ஒரு மணி நேரத்துக்குள் கூட்டம் முடிவடைந்தது.
இதற்கிடையே, மணிப்பூர் சட்டசபை கூட்டத்தொடரை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மணிப்பூர் கலவரத்திற்கு பிறகு சட்டசபை கூடிய போது ஒரு மணி நேரத்திற்கு குறைவாக மட்டுமே கூட்டம் நடந்துள்ளது. இது ஒரு கேலிக்கூத்தாகத் தான் பார்க்க முடிகிறது. பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தும் பா.ஜ.க, சில நாள்களுக்கு கூட்டத்தொடரை நடத்த மனம் இல்லை. அப்படி முழுமையாக நடத்தப்பட்டியிருந்தால், பா.ஜ.க.வுக்குள் நடக்கும் பிளவுகளும், வேறுபாடுகளும் வெளிப்பட்டிருக்கும்.
மேலும், பா.ஜ.கவைச் சேர்ந்த 7 பேர் உள்பட 10 குக்கி எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றக் கூட்டத்தொடரை புறக்கணித்திருப்பது என்பது மாநிலம் பிளவுபட்டிருப்பதை காட்டுகிறது. அங்கு அமைதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முதல்வர் பொறுத்தமற்றவர்கள் என்பதை காட்டுகிறது. பா.ஜ.க எப்போதும் போல் ஒரு வாய்ப்பை தனக்கு சாதமாக மாற்றி இருக்கிறது” என்று தெரிவித்தார்.