உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாக இன்று (05.10.2021) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்த நவ்ஜோத் சித்து, "நாளைக்குள் விவசாயிகளின் கொடூர கொலைக்குப் பின்னால் உள்ள மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்படாவிட்டால், விவசாயிகளுக்காகப் போராடியதற்காகச் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட எங்கள் தலைவர் பிரியங்கா காந்தி விடுவிக்கப்படாவிட்டால் பஞ்சாப் காங்கிரஸ் லக்கிம்பூர் கெரியை நோக்கி அணிவகுத்துச் செல்லும்" எனக் கூறியுள்ளார். ஏற்கனவே அரசியல் தலைவர்களை லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்துவரும் நிலையில் சித்துவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்து நேற்று லக்கிம்பூர் வன்முறையைக் கண்டித்து சண்டிகரில் உள்ள ஆளுநர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தியதும், பின்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.